இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
துணைவேந்தரின் கல்விசார் மற்றும் நிர்வாக சார் முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆய்வு சார்ந்த மோசடிகள்
மேலும், அவரது முறைகேடுகள் தொடர்பில் நாட்டின் நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி செயலகத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் துணை வேந்தரை பதிலீடு செய்வதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த விவகாரம் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
துணைவேந்தரை பணி நீக்குவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் துணைவேந்தர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கல்வி அமைச்சர், ராஜாங்க உயர்கல்வி அமைச்சர், கல்வி அமைச்சரின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய சில தரப்பினருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த பல்கலைக்கழக துணைவேந்தரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பெற்றுக் கொண்டார்.
துணைவேந்தரின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி இது தொடர்பிலான விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதைவேளை, துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தி முடிக்கப்படவில்லை.
தற்போதைய துணைவேந்தரின் பேராசிரியர் பதவி தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதவியினை பெற்றுக் கொள்வதிலும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமூகவியல் மற்றும் கலை, கலாச்சார பீடங்களின் பீடாதிபதிகளுக்கு இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரியும்.
துணைவேந்தருக்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், இதுவரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு பேராசிரியர் பதவி தொடர்பிலான மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக இலங்கை ஊடகங்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி உள்ளது.
உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சரியான முறையில் பேராசிரியர் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் போலியான அடிப்படையில் கல்வி சார்ந்த தகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வு சார்ந்த மோசடிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உரிய தர நிர்ணயங்களை பின்பற்றாது பல்வேறு நபர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு கட்டுரைகள்
தற்போதைய துணைவேந்தர் காலத்திலும் இதே விதமாக முறைகேடான அடிப்படையில் பதவி உயர்வுகளும் கல்வி சார்ந்த தகமை உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தரம் குறைந்த வகையில் கல்வி சார்ந்த தகமைகள் வழங்கப்படுவதனால் பொதுமக்களின் பல மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் விரிவுரையாளர் ஒருவருக்கு பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட விரிவுரையாளர் பதவியை வகித்து வந்த குறித்த நபர் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். எனினும் அவர் இதுவரையில் கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் அவர் எதுவிதமான கிரமமான ஆய்வுகளையும் செய்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு செய்தார் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் இந்த விரிவுரையாளர் பல்வேறு சஞ்சிகைகளில் ஆய்வுகளை சமர்ப்பித்து உள்ளதாக கூறிய போதிலும் பேராசிரியர் தகுதிக்கான ஆய்வு கட்டுரைகளாக அவை அமையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த போலியான ஆய்வுகள் ஆய்வறிக்கைகள் மூலம் பேராசிரியர் பதவியை பெற்றுக்கொண்ட குறித்த நபர் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் ஒரு விரிவுரையாளரும் இவ்வாறு பேராசிரியர் பதவிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இவரும் கலாநிதி பட்டம் பெற்றுக் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான நபர்கள் உலக தரத்திலான சஞ்சிகைகள் அல்லது பேராசிரியர்களை அங்கீகரிக்கும் சஞ்சிகைகளில் ஆய்வுகளை பிரசூரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சில ஆய்வுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஆய்வுகளும் போதிய தரத்தினை பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விரிவுரையாளரும் ஒரே ஆண்டில் 25 சஞ்சிகைகளில், ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆய்வு கட்டுரைகள் பேராசிரியர் பதவி உயர்விற்கான தகுதிநிலையை கொண்டிருக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை பேராசிரியர் ஒருவரும் இதே விதமாக கலாநிதி பட்டம் இன்றி அரசியல் விஞ்ஞான பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஒரு ஆண்டு காலத்தில் குறித்த நபர் எழுதிய 25 ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் இவருக்கு அந்த தகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரைகளின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையின் கல்வித்துறை தரத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்லைக்கழக கல்வியின் தரம்
கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த துணைவேந்தர் இவ்வாறு முறைகேடான அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அவர் தனது ஆய்வுக்கு பங்களிப்பு வழங்கியவரை பற்றி குறிப்பிட்ட போதிலும் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பம் செய்த போது ஆய்வுகளை தான் மட்டுமே தனியாக மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் 21 பேராசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகவும் இதில் பல பதவி உயர்வுகள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
உரிய தகுதிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் கல்வித்துறையை சீரழிப்பதாகவும் உரிய முறையில் ஆய்வுகளை நடத்தி அதன் ஊடாக பதவி உயர்வு பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதிகாரத்தில் இருப்பவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு பிழையான நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் பதவி உயர்வுகளை வழங்குவதானது மக்களின் பணத்தை விரயமாக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு முறைகேடுகளும் பிழையான நிர்வாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்விசார் தகுதிகளை உயர்த்திக் கொள்வதற்காக இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், துணைவேந்தரால் வழங்கப்பட்ட 18 நியமனங்கள் வரவு செலவுத் திட்ட சுற்று நிருபத்திற்கு முரணானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைகேடுகள் தொடர்பில் மனித உரிமை உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசார் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் இடம்பெற்று வரும் குறைபாடுகள், பல்லைக்கழக கல்வியின் தரத்தை மலினப்படுத்தும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றைப் போன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்விச் செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெறுவது பாரதூரமான பிரச்சினையாக உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |