இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருகின்றன.
தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள்
இன்று (06) மாலை வேளையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உருவாக்கப்பட்ட இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம் பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார்படுத்தி வருவதாகவும் எனவே தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள் ஏற்ப்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



