ஈரானிய வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்ப முடிவு! விளக்கம் கொடுத்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரியிருந்த ஈரான் மகளிர் தேசிய கால்பந்து அணியின் மூன்று வீராங்கனைகள், மீண்டும் ஈரான் நாட்டுக்கே திரும்பத் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நேற்றைய தினம்(15.03.2026) வெளியாகியுள்ளது.
நாடு திரும்பும் வீராங்கனைகள்
மகளிர் ஆசியக் கிண்ண போட்டியின் போது, ஈரான் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், தாயகம் திரும்பினால் தண்டனை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் 7 வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தனர்.
இவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கடந்த வாரம் அவுஸ்திரேலிய அரசு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான விசாக்களை வழங்கியிருந்தது.

7 வீராங்கனைகளில் நால்வர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதில் மூவர் ஈரான் திரும்புகின்றனர், மற்றொருவர் முன்னரே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) இது குறித்துக் கூறுகையில், "வீராங்கனைகள் தங்களின் முடிவைத் தெரிவித்த பிறகு, அவர்கள் மீண்டும் ஆலோசிப்பதற்குப் பல வாய்ப்புகளை வழங்கினோம். ஆஸ்திரேலிய அரசாங்கம் வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் வழங்க முடியும். ஆனால், அவர்கள் இத்தகைய கடினமான முடிவுகளை எடுக்கும் பின்னணியில் உள்ள சூழலை எம்மால் மாற்ற முடியாது." என கூறியுள்ளார்.
தேசிய கீதப் போராட்டத்தைத் தொடர்ந்து ஈரானில் தங்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அச்சமடைந்தே இவர்கள் ஆரம்பத்தில் புகலிடம் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.