ஈரானில் பாடசாலை மாணவிகளுக்குத் திட்டமிடப்பட்டு விஷம் கொடுக்கப்படுகின்றதா....! வெளியான அதிர்ச்சித் தகவல்
ஈரானில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளைத் தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த 3 மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.
உடலில் விஷம்
வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் விஷம் கலந்துள்ளமை தெரிய வந்துள்ளது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விஷம் கொடுக்கப்பட்டது உண்மை
இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் யூனஸ் பனாஹி (Younes Panahi) கூறுகையில், கோம் நகர் பாடசாலைகளில் பல மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.
பெண்கள் கல்வி பெறுவதைத் தடுப்பதற்காகவே சிலர் இது போன்று செய்துவருவதாகவும், பெண்களுக்கான பாடசாலைகளை மூட வலியுறுத்திச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசிடம் விளக்கம் கேட்டுப் போராட்டம்
கடந்த 14ஆம் திகதி மாணவிகளின் பெற்றோர்கள் அரசிடம் விளக்கம் கேட்டுப் போராட்டம் நடத்தியதையடுத்து, இந்தச் சம்பவம் தற்போது வெளிசத்திற்கு வந்துள்ளது.
நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இதற்குத் தொடர்புடைய குற்றவாளிகள் என்று யாரையும் கைது செய்யவில்லையெனக் கூறப்படுகின்றது.
ஈரானில் மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தடுக்க அந்நாட்டைச் சேர்ந்த மதவாதிகள் இது போன்ற செயலைச் செய்து வருவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




