ஈரான் போர் பதற்றம்: மீண்டும் உயரும் பெட்ரோல் - டீசல் விலை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட தொடக்கத்தில் எண்ணெய் விலை குறைந்தாலும், இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று மசகு எண்ணெய் விலை 3.5 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 98 டொலரைத் தாண்டியது. போர் தொடங்குவதற்கு முந்தைய விலையை விட இது மிகவும் அதிகமாகும்.
இதன் எதிரொலியாக, பிரித்தானியா போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு 158.03 பென்ஸாகவும், டீசல் 191.11 பென்ஸாகவும் உயர்ந்துள்ளது.
சாரதிகள் வருத்தம்..
போர் தொடங்கிய பெப்ரவரி 28 முதல் தற்போது வரை ஒரு டேங்க் பெட்ரோல் நிரப்ப இலங்கை மதிப்பில் சுமார் 4,200 ரூபாயும், டீசலுக்கு 116,00 ரூபாயும் கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடிவைக்கக்கூடும் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கடல்வழிப் பாதை திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தபோதிலும், தடையின்றி கப்பல்கள் செல்ல ஈரான் இன்னும் முழுமையான அனுமதி வழங்கவில்லை.
அமெரிக்கப் படைகள் இந்த பகுதியிலிருந்து வெளியேறும் வரை பாதுகாப்பு உறுதி செய்யப்படாது என ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை போர் நிறுத்தம் முறையாகப் பின்பற்றப்பட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும், தற்போதைய சூழலில் உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, சர்வதேச வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.