பெரும் பதற்றத்தில் ஈரான்! முழுமையாக முடக்கியுள்ள இணையச் சேவை - உள்நுழைந்துள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கம் இணையச் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஈலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ளது.
போராட்டங்கள்
ஈரானில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, ஸ்டார்லிங்க் நிறுவனம் அங்குள்ள பயனாளர்களுக்கான மாதந்திர சந்தா கட்டணத்தைத் தள்ளுபடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தாத நிலையிலும் தங்களுக்கு இணையம் கிடைப்பதாக ஈரானில் உள்ள பல பயனாளர்கள் பிபிசி பாரசீக சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானில் ஸ்டார்லிங்க் கருவிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இதைப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
போராட்டங்கள் மற்றும் வன்முறை ஒடுக்குமுறை குறித்த வீடியோக்கள் வெளியாகும் பகுதிகளில், கட்டடங்களின் மேற்கூரைகளில் ஸ்டார்லிங்க் ஆண்டெனாக்கள் உள்ளனவா என ஈரான் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
ஈரான் உளவுத்துறை
சமீபத்தில், "சதித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த" ஏராளமான ஸ்டார்லிங்க் கருவிகளைப் பறிமுதல் செய்துள்ளதாக ஈரான் உளவுத்துறை அறிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இணைய முடக்கம் காரணமாக இந்தத் தகவல்கள் வெளிவராமல் தடுக்க அரசு முயல்கிறது.
"அரசின் தணிக்கை இன்றி உலகத்தோடு தொடர்பு கொள்ள ஸ்டார்லிங்க் மட்டுமே தற்போது ஒரே வழியாக உள்ளது" எனப் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொடூரமான காட்சி
சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் தற்போது ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாகக் கணிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், "வெளிநாடுகளில் இருந்து வரும் பயங்கரவாத உத்தரவுகளைத் தடுக்கவே இணையம் முடக்கப்பட்டுள்ளது" என்று நியாயப்படுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் போன்ற செயலிகள் வன்முறையைத் தூண்டப் பயன்படுத்தப்படுவதாக அரசு குற்றம் சாட்டுகிறது.
இருப்பினும், உயிரைப் பணயம் வைத்து போராட்டக் களத்தின் கொடூரமான காட்சிகளை ஈரானியர்கள் ஸ்டார்லிங்க் உதவியுடன் சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.