அமெரிக்கா - ஈரான் ராஜதந்திர தொடர்புகள் முற்றிலும் துண்டிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ராஜதந்திர நேரடி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வருவதைத் தொடர்ந்து, அமெரிக்கா இராணுவ தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோருக்கிடையிலான தொடர்புகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானை தாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு
இஸ்ரேல் ஜூன் மாதத்தில் தொடங்கிய 12 நாட்கள் நீண்ட போரின் போது, அமெரிக்கா ஈரானின் அணு நிலையங்களை குண்டுவீசி தாக்கியிருந்த நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு பதிலடி கொடுப்போம் என தெஹ்ரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்தப் பதற்ற சூழலில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்தில் பணியாற்றும் சில பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் எச்சரிக்கைகள் தீவிரமடைந்திருந்தாலும், ஈரானில் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக வழக்குகள் நடத்தி தண்டனைகள் வழங்கப்படும் என அந்நாட்டு நீதித்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, , ஈரானை தாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருப்பதாக ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசீஸ் நாசிர்சாதே எச்சரித்துள்ளார்.
எங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உதவி செய்யும் நாடுகள் அனைத்தும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.