திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்த ஈரானின் போர் கப்பல் - பின்னணியில் இஸ்ரேல்?
ஈரான் கடற்படைக்குச் சொந்தமான பாரிய போர்க்கப்பல் ஒன்று நேற்று ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் கப்பலிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈரானிய கடற்படை போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஜாஸ்க் துறைமுகம் அருகில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
கப்பலில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. பயிற்சிக்காக இந்த கப்பல் சர்வதேச கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அந்த கப்பலின் கட்டமைப்புகளில் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளாகச் சேவையிலிருந்து வந்த கப்பல் பல பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளது.
இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் 20 மணி நேரம் போராடியதாகவும், எனினும் கப்பல் எரிந்து கடலில் மூழ்கிவிட்டதாகவும் ஈரான் கடற்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அதிகமான பதற்றம் நிலவும் இந்த கடல் வழித்தடம் அமைந்துள்ள, ஈரானுக்கு அருகில் கடலில் நடந்து வரும் சம்பவங்களில் இது அண்மைய சம்பவமாகும்.
இந்த சம்பவம் நடந்துள்ள ஓமன் வளைகுடா ஹோர்முஸ் நீரிணையுடன் இணைக்கின்றது.
குறுகலான இந்த ஹோர்முஸ் நீரிணை என்ற கால்வாய் உலகில் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான கால்வாய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஈரானுக்கும் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பகை ஏற்படுத்துவதற்கான காரணிகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது.
கடற்பரப்பில் தமது நாடுகளுக்குச் சொந்தமாகக் கப்பல்கள் குறிவைக்கப்படுவதாக ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.
அத்துடன் செங்கடலில் தமக்குச் சொந்தமான சாவிஸ் என்ற கப்பல் குறிவைக்கப்பட்டதாக ஈரான் குற்றம் சுமத்தி இருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் தமது கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஈரானுக்குச் சொந்தமான பாரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியதன் பின்னணியில் இஸ்ரேலின் கரங்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.