மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக நீக்கினால், தங்களின் உயர் மட்டச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரியத்தைக் குறைக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரானின் அணுசக்தித் துறைத் தலைவர் முகமது இஸ்லாமி, 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்வது என்பது "பதிலுக்கு அனைத்துத் தடைகளும் நீக்கப்படுமா" என்பதைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்தார்.
அணுசக்தி விவகாரம்
அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான 90 சதவீதத் தகுதிக்கு மிக நெருக்கமான 60 சதவீத அளவில் யுரேனியத்தைச் செறிவூட்டும் ஒரே அணு ஆயுதமற்ற நாடு ஈரான் மட்டுமே என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி விவகாரத்தில் விதித்துள்ள கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலான தேவைகளுக்கே என்று அந்நாடு தொடர்ந்து வாதிட்டு வருகிறது. எனினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலுக்குப் பாரிய தடையை விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் ஓமன் நாட்டிற்கு, ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் அலி லாரிஜானி இன்று(10) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடும் பொருளாதாரத் தடை
சுமார் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மீண்டும் தொடங்கியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளில், லாரிஜானி ஈரானின் புதிய நிலைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த செய்திகளைப் பரிமாறிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த ‘நெகிழ்வுத்தன்மை’ அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அமையும்.

முன்னதாக, 2015-ஆம் ஆண்டு எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்தே ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீதும் கடுமையான வரிகளை விதித்து வருவதால், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பதற்றத்தைத் தணிக்க இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.