ஈரானில் போராட்டங்கள் தீவிரம்: இணைய சேவைகள் முற்றாக முடக்கம்
ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பான நெட்புளொக்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த இணையத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்புளொக்ஸ் குறிப்பிட்டது.

இது, மிக முக்கியமான தருணத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் உரிமையை கடுமையாக பாதிப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து, வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்ததும், உள்ளூர் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையும் எதிர்த்து, ஈரானின் பல நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட கணக்கெடுப்பின் படி, இந்த போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரைச் சேர்த்து குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் குவிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். நகர மையத்திலிருந்து பயணம் செய்தபோது பல சாலைகள் மறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கலகங்களில் ஈடுபடுவோருக்கு உரிய பதில் வழஙக்ப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படுவதாகவும் ஈரான் அரச தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
“பாதுகாப்பின்மையை உருவாக்க யாராவது முயன்றால், அவர்களுக்கு எந்த விதமான தளர்வும் வழங்கப்படமாட்டாது,” என தலைமை நீதிபதி கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜெயி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கருத்து வெளிப்பாடு, சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியான பேரணிகளில் ஈடுபடுதல் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.