அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சனிக்கிழமை (27.12.2025) வெளியான நேர்காணலில் இதனைப் பகிர்ந்துள்ள அவர், இந்த மோதலானது 1980-களில் ஈராக் மற்றும் ஈரான் இடையே நடந்த மிகக்கொடிய போரை விடவும் மேலானது என்று குறிப்பிட்டுள்ளார்.
போரின் தன்மை
மேற்கத்திய நாடுகள் ஈரானின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க விரும்புவதாகவும், தற்போதைய போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் கருத்துக்கள் சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்குதல்
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் வான்வழிப் போரில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உட்பட 1,100 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |