ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல் : வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து மீண்டும் முடக்கம்
ஹோர்முஸ் நீரிணையில் தாய்வானைச் சேர்ந்த எவர்கிரீன் நிறுவனத்தின் சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்த முக்கிய கடல் வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து சீராகி வந்த நிலையில், இந்த திடீர் தாக்குதல் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
இத்தாக்குதலில் கப்பலின் மேற்பகுதி இலேசான சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, வளைகுடா பகுதியில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்களையும் ஆயிரக்கணக்கான மாலுமிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐநா சபை மேற்கொண்டு வந்த தன்னார்வ மீட்புத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
தங்களின் அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலிலும், மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. இதனால் மாபெரும் மசகு எண்ணெய் ஏற்றிச்செல்லும் ஒரு சில கப்பல்கள் தற்போதும் இந்த நீர்ச்சந்தியைப் பயன்படுத்தி வருகின்றன.
இருப்பினும் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்து வழக்கமான நிலையை விட இன்னும் பாதியாகவே உள்ளது.