வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு: வெளியேற அவகாசம் வழங்கிய பொலிஸார்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு வீதி - நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான தொடருந்து தண்டவாளத்துக்கும் கொழும்பு வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகள் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த காணிகளுக்கு நேற்று புதன்கிழமை (09.08.2023) சென்ற பொலிஸார் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற 2 நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கொழும்பு வீதிக்கும் தொடருந்து தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கும் இடையிலான கொழும்பு வீதியை அண்டிய பகுதியிலுள்ள 28 ஏக்கருக்கு மேற்பட்ட அரச காணிகளை கடந்த சில வாரங்களாக சிலர் சட்டவிரோதமாக உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி கம்பி வேலிகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.
காணி அபகரிப்பு
குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை சட்ட ரீதியாக அரசாங்கத்திடம் இருந்து காணியை பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்த காணி அபகரிப்பு தொடர்பாக ஏற்பட்ட சார்ச்சையைடுத்து சம்பவ தினமான நேற்று (09.08.2023) வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் இது அரச காணி, இந்த காணிகளுக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் அவகாசம் வழங்குவதாக அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |