வட்டுக்கோட்டை இளைஞனுக்கு நடந்த அநீதி: சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது விசாரணை (Video)
வட்டுக்கோட்டை இளைஞன் மரணத்துடன் தொடர்புடைய நான்கு உத்தியோகத்தர்கள், தற்பொழுது விசாரணைகளுக்காக, மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டிருப்பதாக, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள், குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில்
அவர்கள் நால்வரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இடமாற்றம்
விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொலிஸ் நிலையம் ஒன்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.
குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
எனினும் தற்பொழுது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் அதே இடத்திலே கடமையாற்றினால் அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள்
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை. பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |