பிரதமர் ஹரினியை கொல்ல சதி..! சமூக ஊடகப் பதிவால் எழுந்துள்ள சர்ச்சை
பிரதமர் ஹரினி அமரசூரியவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்பியமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அப்பணியகத்தின் கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மிலிந்த டி சில்வா, கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய
பேஸ்புக் சமூக ஊடகத்தில் (பிரேக்கிங்: ஹரினியை கொலை செய்வதற்கான சதித்திட்டம்) என்ற தலைப்பின் கீழ், தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் அரச அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போலித் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததைத் தொடர்ந்து, அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்வதற்கான சதித்திட்டம் இருப்பதாகக் கூறி இந்தப் போலித் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைத் துரிதமாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.