அனோஜனுக்காக ஒன்றிணைந்த இலங்கை ஊடக அமைப்புகள் – சவுதி தலைமையிடம் கருணை கோரிக்கை
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு இலங்கையைச் சேர்ந்த ஐந்து ஊடக அமைப்புகள் இணைந்து சவுதி அரேபியாவின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
செப்டம்பர் 22ஆம் திகதியிடப்பட்ட கூட்டு அறிக்கையொன்றின் மூலம், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மற்றும் சவுதி அரேபிய தலைமைத்துவத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிவராசா அனோஜன்
அனோஜனின் வழக்கு சவுதி அரேபியாவின் எஞ்சியுள்ள நீதித்துறை நடவடிக்கைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கருணையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துமாறு ஊடக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சவுதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறைகளைத் தாங்கள் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், இந்த வழக்கு ஆழமான மனிதாபிமான பரிமாணத்தையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

“சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ஊடக அமைப்புகளாகிய நாங்கள், அனைத்து மதங்களுக்கும் மதிப்பளித்தல், மத நல்லிணக்கம், பொறுப்பான கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றுக்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தில் கருணை, மன்னிப்பு, மனந்திரும்புதல் மற்றும் இரக்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அனோஜனின் வழக்கில் கருணை அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் உயர் மட்டத்தில் இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.
தலைமையிடம் கோரிக்கை
இலங்கை வெளிவிவகார அமைச்சு அனோஜனின் வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவது இலங்கை மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் ஆபத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், உயிரைக் காப்பாற்றுவதற்கும் அவரைத் தனது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக மீள அழைத்துவருவதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு கோரிக்கையை சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement), தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பு (South Asian Women in Media), இலங்கை பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சங்கம் (Sri Lanka Working Journalists Association), தமிழ் ஊடகக் கூட்டமைப்பு (Tamil Media Alliance) மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் (Sri Lanka Muslim Media Forum) ஆகிய ஐந்து அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளன.