சிறுமி டினோஜாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணத்தில் எழுந்த சந்தேகம்
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும் பெண்ணினுடைய மரணம் தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன்.
இதனையடுத்து, அந்தபெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன்.
இந்த நிலையில், சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.
மேலும், குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவேன். குறிப்பாக இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் மனுவினைக் கையளிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன் போது பதிலளிக்கையில், “வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால்தான் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரிய தரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் தொம்மைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோரும் இந்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணையினைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam