தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை
கிளிநொச்சி மாவட்டத்தில், எழுத்தாளரான தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகிய இருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகள், நிதிக் கையாள்கை, தமிழ்த்தேசிய நிகழ்வுகள் மற்றும் அரச எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைப்பவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி கடந்த 2024.04.04 ஆம் திகதி கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவினரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மு.ப.10.00 மணி முதல் பி.ப.1.30 மணிவரையான மூன்றரை மணிநேரங்கள் சண்முகராஜா ஜீவராஜா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம்
இதேவேளை கடந்த 2024.02.10 அன்று கிளிநொச்சியில் நா.யோகேந்திரநாதனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இந்த விழா ஒழுங்கமைப்பு யாருடையது? அந்த நூல் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் வகையில் எழுதப்பட்டதா? நிகழ்வில் பங்கேற்றவர்கள் யார்? நீங்கள் எதற்காக தலைமையேற்று நடாத்தினீர்கள்? போன்ற வினாக்களை முன்வைத்து, கடந்த 2024.04.11 ஆம் திகதி, பரந்தனிலுள்ள குற்றத்தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தீபச்செல்வன் இரண்டரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |