கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குடிவரவு அதிகாரிகள் அடையாள தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் 24 மணித்தியால தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிகளவான குடிவரவு மற்றும் குடியகல்வு செயற்பாடுகள் இடம்பெறும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், கடமைகளை நிறைவேற்ற போதுமான பணியாளர்கள் இல்லை.
எதிர்ப்பு நடவடிக்கை
எனினும் நாட்டின் நன்மை கருதி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் குடிவரவு அதிகாரிகள் பணியாற்றுவதாக, இலங்கை குடிவரவு அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடமை முறைக்கு மேலதிகமாக பொருளாதார நெருக்கடி மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகள், சிரமங்கள் இருந்தபோதிலும் சிறந்த சேவையை வழங்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
ஆனாலும் சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் கடமை முறையை மாற்றுவதற்கு திணைக்கள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் முதல் நாளை காலை 9.00 மணி வரை கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என சங்கத்தின் செயலாளர் கே.பி. மணவாடு தெரிவித்துள்ளார்.