சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய அதிகாரியிடம் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகாரியிடம் சி.ஐ.டியினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் முன்னேற்றத்தைக் காட்ட அரசுக்கு உள்ள அரசியல் மற்றும் மத அழுத்தங்களுக்கு மத்தியில், இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
“சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயரில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார்.
ரவி செனவிரத்ன
இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த மனுவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் பின்வறுமாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை வழிநடத்திய ரவி செனவிரத்ன, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்“சோனிக் சோனிக்” என்பது முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி பண்டார என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
“சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயர் கொண்ட பண்டார என்று கூறப்படும் நபரை விசாரிக்க சி.ஐ.டி சென்றபோது, அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபரான சம்பத் லியனகே, மனுதாரரைத் தொடர்பு கொண்டு, பண்டாரவுக்கும், சஹரானுக்கும் உள்ள உறவு தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய ஒரு நடவடிக்கையின் இரகசிய பகுதியாகும் என்பதால், விசாரணையைத் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், மனுதாரர் குறிப்பிட்ட அதிகாரியின் கோரிக்கையை மறுத்து, ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு அதிகாரி
ஆனால் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி பண்டார விசாரணை அறிக்கையில் முன்னதாக கூறிய நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் சஹாரானுடனான தனது உறவு குறித்து எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டார்” என்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை வழிநடத்த மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர மீண்டும் பணியமர்த்தப்பட்டு விசாரணையை முன்னெடுக்க அழைக்கப்பட்டார்.
இந்த விசாரணையின் முக்கிய சாட்சியான சோனிக் சோனிக்கை விசாரணைக்காக முன்னிலைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கான அழுத்தங்கள்
இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் அதைத் தவிர்த்து வருகிறார்.
ஒரு முறை தனது பெயர் தவறு என்றும், ஒரு முறை வேறு சில காரணங்களைக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்திலும் குறித்த விசாரணைக்காக சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சில எதிர்தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தனர்.
தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள ஆழமான வலையமைப்புக்கள் இந்த அரசாங்கத்திலும் செல்வாக்கு மிக்க பதவிகளை வகிக்கின்றனவா என்ற கேள்வி எழுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இறுதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலையீட்டிற்குப் பிறகு அவர் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, அதற்கு ISIS அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிய நபர் சோனிக் சோனிக் என்று அழைக்கப்படும் பண்டார என அடையாளம் காணப்பட்டார்.
சோனிக் சோனிக் தகவல்களை வெளிப்படுத்தினால், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள புலனாய்வு அதிகாரிகளைக் கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது.
அவர் மேலும் எந்த தகவலையும் வழங்கவில்லை என்றால், அவர் பெரும்பாலும் கைது செய்யப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |