பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் (Photos)
முன்னர் எழுத்துமூலமா முறைப்பாடுகளே ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் தற்போது 1960 என்னும் விசேட இருபத்திநான்கு மணிநேர தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவேளையிலும் தொடர்புகொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ரி.பி.பரமேஸ்வரன் (R.P.Parameswaran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கமால் சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையிலான உறவினை வளர்ப்பதற்காக மிகவும் முக்கியமான கொள்கையாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K.Karunakaran) தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ரி.பி.பரமேஸ்வரன்,
19வது திருத்த சட்டம் ஊடாக பல்வேறு விடயங்கள் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இருந்தன. இடமாற்றங்கள்,பதவி உயர்வுகள் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம் பொலிஸ் திணைக்களத்தின் சேவைகளை பொதுமக்கள் சரியான முறையில் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பொலிஸ் திணைக்களத்தினை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் திணைக்களமாக மாற்றிக்கொள்ளும் செயற்பாட்டினையே இலங்கை பொலிஸ் ஆணைக்குழு முன்னெடுக்கின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் முன்னைய காலத்தில் எழுத்துமூலமான விண்ணப்பம் வழங்கவேண்டும். ஆனால் தற்போது 1960 என்னும் விசேட 24மணி நேர சேவையொன்றை உருவாக்கியுள்ளோம்.
இதன்மூலம் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்புகொள்ளமுடியும். அதனை தொடர்புபட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஊடாக நடவடிக்கையெடுப்போம்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடானது வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வரவேற்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் அதன் செயற்பாடுகள் மக்களுக்குள் சென்றடையவில்லையென்ற குறைபாடு இருந்தன.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் பெரியதொரு மாகாணம். மூன்று மாவட்டங்கள் உள்ளது. இவையணைத்திற்கும் ஒரு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலத்தினை வைத்து கடமையாற்றுவது என்பது மிகவும் கஸ்டமான விடயமாகவுள்ளது. மக்களுக்கு அண்மையாக செல்லவேண்டிய பொறுப்பு உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுடன் பொலிஸ்திணைக்களத்தினை நெருங்கி பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.








