வெறும் பூங்கொத்துகளுடன் முடிந்துவிடாது மகளிர் தினம் - பெண்களின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர்
பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
"வளமான நாட்டின் அபிமானம் - அவளே நாட்டின் முன்னோடி" எனும் தொனிப்பொருளில் மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தில் நேற்று (08.03.2026) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாரிய போராட்டங்களின் விளைவு
அங்கு பிரதமர் மேலும் உரையாற்றுகையில்; "இன்று பெண்கள் அனுபவிக்கும் கல்வி மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சகல சுதந்திரங்களும், வரலாறு நெடுகிலும் பெண்கள் முன்னெடுத்த பாரிய போராட்டங்களின் விளைவுகளாகும். இந்த நாளை வெறும் பூங்கொத்துக்களுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. அந்த உரிமைகளைப் பாதுகாத்து, பெண்களின் வாழ்க்கையை தற்போதைய நிலையை விட உயர் இடத்திற்குக் கொண்டு செல்வதே அரசின் உன்னத நோக்கமாகும்.
பெண் தொழில்முயற்சியாளர்களின் தயாரிப்புகள் அந்தந்தப் பிரதேசங்களுக்குள் மட்டும் முடங்கிவிடக்கூடாது. அவர்களைத் தேசிய பொருளாதாரத்தின் நேரடிப் பங்காளிகளாக மாற்றும் பின்னணியை அரசு உருவாக்கி வருகின்றது. அதேபோல், பெண்கள் ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை மதிப்பீடு செய்ய "தேசிய பராமரிப்புக் கொள்கை" ஒன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.
உலகில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மனிதநேயத்துக்காகவும் அமைதிக்காகவும் முன்னிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. எனவே, கருணையுடன் ஒன்றிணைந்து அமைதிக்காகக் குரல் எழுப்புமாறு இந்நாட்டுப் பெண்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள்
இவ்விழாவில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், "நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் சிந்திய கண்ணீர் மற்றும் வியர்வைக்குச் சரியான மதிப்பினை வழங்கும் யுகம் தற்போது உதயமாகியுள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்த விரிவான கட்டமைப்பு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்." - என்றார்.
இந்தத் தேசிய விழாவின் ஓர் அங்கமாக, நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 சிறந்த பெண் தொழில் முயற்சி வெற்றியாளர்களுக்குப் பிரதமரால் கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, தென் மாகாண ஆளுநர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்








