இலங்கை காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் மீண்டுமொரு சர்வதேச எச்சரிக்கை
மனித உரிமை மீறல்கள் குறித்த கரிசனைகளை அடுத்து, ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சி அளிப்பது குறித்த திட்டத்தை கைவிடுமாறு, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கென்னி மெக்அஸ்கில் அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் இந்த மாத ஆரம்பத்தில் ஸ்கொட்லாந்து நீதி அமைச்சின் செயலாளர் கீத் பிரவுனுக்கு கடிதம் எழுதியதை அடுத்து மெக்அஸ்கிலும் இந்த விடயம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பட விளக்கம் கடந்த சில மாதங்களாக ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, ஸ்ரீலங்கா காவல்துறைக்கு ஸ்கொட்லாந்து காவல்துறையின் பயிற்சி நடவடிக்கைகள் குறித்த மீளாய்வு அறிக்கையை வெளியிடுமாறு மனித உரிமைகள் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்த சூழ்நிலையில், ஸ்கொட்லாந்து காவல்துறையின் இந்த பயிற்சி திட்டம் குறித்து கலவையான மற்றும் தெளிவற்ற செய்திகள் வெளியாவதாக மெக்அஸ்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பயிற்சி திட்டம் குறித்த அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் இதில் தலையீடு செய்ய வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளை நிலைமைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமுல்படுத்தும் வரையில், ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சி அளிக்கும் ஸ்கொட்லாந்து காவல்துறையின் திட்டத்தை நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித உரிமைகளை ஆதரிக்கும் நீண்ட பாரம்பரியத்தை ஸ்காட்லாந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகளுக்காக வலுவாக வாதாடுவதில் ஸ்கொட்லாந்தின் நற்பெயருக்கு அரசாங்கமும் காவல்துறையும் உத்தரவாதமளிக்க வேண்டுமென, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கென்னி மெக்அஸ்கில் மேலும் தெரிவித்துள்ளார்.