நாடுகளின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
நாடுகளின் நெருக்கடியான பொருளாதாரங்களுக்கான கடனை மறுசீரமைப்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவோ இன்று தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் சந்திப்புக்கு அப்பால் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜி20 நாடுகளின் தலைமை பதவி
கோவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக தெற்காசிய அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அவசர நிதியை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள நிலையில், இந்தியாவுக்கு ஜி20 நாடுகளின் தலைமை பதவி கிடைத்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் தலைமையில் பெங்களூரில் நடைபெறும் ஜி20 சந்திப்பில், நேற்று கருத்துரைத்த சீனா, உலகக் கடன் பிரச்சினைகளுக்கான காரணங்களை நியாயமான, புறநிலை மற்றும் ஆழமான வகையில் பகுப்பாய்வு நடத்துமாறு வலியுறுத்தியது.
கருத்து வேறுபாடுகள்
இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து நடத்திய வட்டமேசைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடன் மறுசீரமைப்பு குறித்து, இன்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து பொது மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் கருத்தில் கொண்டு உலகளாவிய இறையாண்மைக் கடன் வட்டமேசையை நடத்துவதாக குறிப்பிட்டார்.
கடனை மறுசீரமைப்பதைத் தவிர, தனியார் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவது இந்தியாவிற்கு மற்றொரு முன்னுரிமைப் பகுதியாக இருக்கிறது என்று ஜோர்ஜீவா இதன்போது குறிப்பிட்டார்.
அரசு மற்றும் நிலையான நாணயங்களால் ஆதரிக்கப்படும் மத்திய வங்கி டிஜிட்டல்
நாணயங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் கிரிப்டோ சொத்துக்களை
வேறுபடுத்த வேண்டும் என்றும் ஜோர்ஜீவா கூறினார்.