செம்மணி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை! துரைராசா ரவிகரன் வலியுறுத்து
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(21.08.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரணதண்டனை வழங்கியிருந்தது.
வழக்கு விசாரணைகள்
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய, அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன.
பின்னர், இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன.
எனவே, குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றேன்.
பன்னாட்டு நீதி விசாரணை
இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப்பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம்பற்றிய விபரங்கள், மணியம்தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்போதைய அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க, அப்போதைய பாதுகாப்புச்செயலர் உள்ளிட்டதரப்பினரும் இத்தகைய வதை முகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 07ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே, இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்பட வேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
