காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேசம் தான் உதவ வேண்டும் : ரவிகரன் தெரிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்து விட்டார்கள் அவர்களுக்கு சர்வதேசம் தான் துணை நின்று இவர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் (31) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம்
மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு விடயத்திற்காக 15 வருடமாக தங்களுடைய உறவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார்கள்.
அரசாங்கமானது ஓமந்தை, வட்டுவாகலிலும் வேறு முகாம்களிலும் சரி உறவுகளை நேரடியாக கொண்டு சென்று ஒப்படைத்திருந்தார்கள்.
ஒப்படைத்த உறவுகளை தான் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு இணைத்து விடுங்கள் என கேட்டு நிற்கிறார்கள்.
இதனைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அல்லது இனவாத அரசாங்கம் நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று, ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த மக்களுக்குரிய விடையை அவர்கள் கூற வேண்டும். இதற்கு சர்வதேசம்தான் எங்களோடு துணை நிற்க வேண்டும். இதற்குரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். இந்த உறவுகளை தேடித்தர வேண்டும்“ என்றும் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |