தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோரிடம் இருந்து நட்டம் வசூலிக்க பரிந்துரை
தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்படும் நட்டத்தை, அவர்களுக்கு வழங்கப்படும் போனஸ் என்ற ஊக்குவிப்பு கொடுப்பனவு அல்லது வெகுமதிகளில் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் இதற்காக புதிய திட்டம் ஒன்றை அரசு மற்றும் துறைசார் அமைச்சகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை இலங்கை பொருட்கள் சேவைகள் சபையின் தலைவர் சீன் வென்டோர்ட் (Sean Van Dort ) செய்துள்ளார்.
சபையின் 54 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில், தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றும் போது, அவர் இந்த பரிந்துரையை முன்மொழிந்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை
சுங்கத் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக அரசு பெருமளவிலான வருவாயை இழந்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் இந்த இழப்பை ஊழியர்களின் ஊக்குவிப்பு கொடுப்பனவு அல்லது வெகுமதிகளில் இருந்து வசூலிக்க அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்மையில், மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையால் ஊழியர்கள் ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |