விகாரமகாதேவி சத்தியாக்கிரகத்தை கலைக்க தீவிரம் - நாளை நீதிமன்றத்தை நாடும் பொலிஸார்..!
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கலைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மீண்டும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கறுவாத்தோட்டம் பொலிஸார் நாளை(26.10.2026) திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் தொடர்பில், சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிக்குகளை கைது செய்ய நடவடிக்கை
பூங்காவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களின் பெயர் விவரங்களை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவுகளைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறிச் செயற்பட்டதாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக “நீதிமன்ற அவமதிப்பு” குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதற்கிடையில், பொதுமக்களுக்குச் சொந்தமான பூங்காவின் ஒரு பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது என்று கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
தற்போது இந்தப் போராட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே ஈடுபட்டுள்ள போதிலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காகவும் சிலர் அங்கு வந்து செல்கின்றனர் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.