வெளிநாடு செல்லும் பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அச்சுறுத்தும் அதிகாரிகள்
இலங்கை விமானப் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மீண்டும் நாட்டுக்குத் திரும்புவார்களா இல்லையா என்பது குறித்து விசாரிப்பதற்கும் அல்லது பயணிகளிடம் அவ்வாறு கடிதங்களை எழுதிப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், விமானச் சேவைப் பேராசிரியரும், விமானியுமான சோனால் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணி ஒருவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவாரா இல்லையா என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரிக்க முடியாது. அவ்வாறு விசாரிப்பது அந்தப் பயணியின் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
மேலும், “விமானப் பயணியின் ஆவணங்களின் துல்லியத்தன்மையை சரிபார்ப்பதே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செய்ய வேண்டியதாகும்.

அந்த ஆவணங்கள் சட்டப்பூர்வமானவையாக இருப்பின் பயணி விமானத்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் கொடுக்க வேண்டும்.
குறித்த பணியகத்தின் சில அதிகாரிகள், தற்போது விமானப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இலங்கை திரும்பாவிட்டாலும் பரவாயில்லை என்பது போன்று அந்தப் பயணிகளிடம் கடிதங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களைப் பெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அத்தகைய சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேரிட்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு தான் அந்தப் பயணிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தான் கடமையாற்றிய காலத்தில் இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்ததில்லை.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் சர்வதேச அரங்கில் சிவில் விமான நிலையத்திற்கு கிடைக்கும் நற்பெயர் பறிபோய்விடும் என” சோனால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.