சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் முக்கிய அறிவித்தலொன்றினை சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ளது.
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்
அதன்படி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதை தவிர்க்கவும், உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பும்படியும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் வழமைபோல் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனவே தூதரகத்தின் அவசர இலக்கமான 054 947 7567ல் இருந்து தூதரகச் சேவைகள் தொடர்பான உதவிகளைப் பெறலாம் என அறிவுறுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து
சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

சவூதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு மொராக்கோ நாட்டவர்களும் இரண்டு அல்ஜீரியர்களும் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக, கொழும்பு மற்றும் ரியாத் இடையிலான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் ஒக்டோபர் 11, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.