கோட்டாபய ராஜபக்சவை திணறடித்த நீதிமன்ற விசாரணை : கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நீதிமன்றத்தில் இடம்பெற்ற சாட்சிய விசாரணையின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, “எனக்குத் தெரியாது”, “எனக்கு நினைவில்லை”, “இது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி இணைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குறித்த வழக்கில், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இந்தச் சாட்சியம் இன்று(27.11.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்லைன் வழியாக முன்னிலையான கோட்டாபய
2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தது.
எனினும், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தன்னால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு நேரில் சமூகமளிக்க முடியாது என அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, கொழும்பிலிருந்து சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று(27) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகே மேற்கொண்ட குறுக்கு விசாரணையின் கீழ் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
சட்டத்தரணி நுவான் போபகே, “சாட்சியமளித்த முன்னைய சந்தர்ப்பத்தில், கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நான் உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக, காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என கேள்வியெழுப்பியிருந்தார்.
அது எனது பொறுப்பல்ல..
இந்த கேள்விக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, “மேதகு நீதிபதி அவர்களே, விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்புச் செயலாளராக எனது பொறுப்பு, இவ்வாறான சம்பவங்களை தேசிய பாதுகாப்பு மற்றும் கொள்கைத் தீர்மானங்கள் என்ற கண்ணோட்டத்தில் கவனிப்பதாகும். கடத்தல் சம்பவங்களை விசாரிப்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அது எனது பொறுப்பு அல்ல.” என்றார். இதனையடுத்து, கீத் நொயார் கடத்தல் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கையொன்றை சட்டத்தரணி நுவான் போபகேவுக்கு உதவியாக இருந்த இளநிலை சட்டத்தரணி, கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்தார்.

சட்டத்தரணி நுவான் போபகே, “இந்த அறிக்கையின்படி, கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவுக்கும் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவுக்கும் நீங்கள் தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தீர்கள் அல்லவா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு கோட்டாபய ராஜபக்ச பதிலளிக்கையில், “ நீதிபதி அவர்களே, இது 2017ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். இது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அவ்வாறான சம்பவம் தொடர்பில் எனக்குத் தகவல் கிடைத்திருந்தால், நான் புலனாய்வுப் பிரிவுத் தலைவருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்திருப்பேன்.” என்றார்.
இதுபோன்று பல கேள்விகள் கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக எழுப்பப்பட்டாலும் அதற்கு அவர் உறுதியான பதிலளிக்காமல் மேலோட்டமான பதில்களையே வழங்கியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri