இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை! ஐ.நா.சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்
இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைப் போர்க்குற்ற விசாரணை தொடர்பான வடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே குடையின் கீழ் வந்திருப்பது இலங்கை போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும்.
இலங்கை போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கான ஏற்பாடு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் 46ம் கூட்டம் பெப்ரவரி 22ம் திகதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், ஆணைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கத்துடன் இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 47 நாடுகளுக்கும் ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.