கிளிநொச்சி பெரும்போக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை பெரும்போக செய்கையில் ஈடுபடும் விவசாயிகளிடமிருந்து அதிகளவான நிதி அளவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அறவீடு செய்யப்பட்ட நிதி தொடர்பான கணக்கறிக்கைகள் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கப்படாமலும் கமநல சேவை நிலையங்களினால் கணக்காய்வுகள் செய்யப்படாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணை மடுக்குளத்திற்கு உள்ள கமக்கார அமைப்புகளால் விவசாயிகளிடமிருந்து அளவிடப்படுகின்ற நிதி தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் கணக்குகள் வெளிப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை குறித்த விவசாயிகளிடமிருந்து கடந்த சிறுபோகத்தில் பெருந்தொகையான நிதி விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்டு அவற்றுக்கான எந்த விதமான கணக்கறிக்கைகளும் விவசாயிகளுக்கும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் கமநல சேவை நிலையங்களினால் கமக்கார அமைப்புகளின் கணக்குகள் ஆய்வு செய்யப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கடந்த சிறுபோகத்தில் 13500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போது ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 13.5மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது.
அதேவேளை இரணைமடு கமக்கார அமைப்புகளினுடைய சம்மேளனம் என்ற அமைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு நூறு ரூபா விதம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறவவிடப்பட்டிருக்கின்றது இவ்வாறு சிறுபோக செய்கையில் அறவிடப்பட்ட நிதிகளுக்கான எந்தவிதமான கணக்கறிக்கைகளையும் வெளிப்படுத்தப்படாத நிலையிலும் கணக்காய்ப்புகள் செய்யப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
விசனம் தெரிவிக்கும் விவசாயிகள்
இதேவேளை தற்போது பெரும் போக செய்கையின் மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து இரணை மடுக்குளத்தின் கீழான விவசாயிகளிமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 19 மில்லியன் ரூபா நிதி அளவிடப்படுகின்றது.
இவ்வாறு விவசாயிகளிடமிருந்து இந்த வருடத்தில் மாத்திரம் 32.5மில்லியன் ரூபா நிதி அறவிடப்படு வருகின்றது. இவ்வாறு ஏற்கனவே அறவிடப்பட்ட எந்த விதமான கணக்குகளும் வெளிப்படுத்தப்படாத நிலையில் மீளவும் 19 மில்லியன் ரூபாய் நிதி அறவிடப்படுகின்றமை தொடர்பில் விவசாயிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெருந்தொகை நிதிகளை அறவீடு செய்கின்ற போதும் அவற்றுக்கான கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படாமலும் இருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இவ்வாறு பெருந்தொகையான நிதி அறவீடு செய்யப்படுகின்றமை மற்றும் சிறுபோகத்தின்
போது சிறுபோக நீர்வரி பங்குகள் மோசடி செய்யப்பட்டமை என பல்வேறு
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற போதும் விவசாயிகளின்
கருத்துக்களை கணக்கில் எடுக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்
சாட்டியுள்ளதுடன் குறித்த மோசடிகளுக்கு பின்னால் மாவட்டத்தின் உயர்நிலை
அதிகாரிகள் இருப்பதாகவே விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.



