கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றதா..! வெளியிடப்பட்டுள்ள சந்தேகம்
கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும், ஆசிரிய நியமனங்களை இழுத்தடிப்பு செய்யும் செயற்பாடுகளும் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று (27.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உரிமை போராட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள்
மேலும் தெரிவிக்கையில், இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் தங்களுடைய உரிமை போராட்டத்தினை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் தான் கடந்த 24ஆம் திகதியும் இசுருபாயவுக்கு முன்பாக ஒரு உரிமை போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த போது ரணில் ராஜபக்சவினுடைய அரசாங்கமானது கல்வி அமைச்சினை நோக்கி சென்ற ஆசிரியர்கள் மீது ரபர் குண்டுகளை பாவித்தும் அதே போன்று நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் போன்றவற்றை பயன்படுத்தி மிலேச்சத்தனமாக அவர்களை அடக்குகின்ற செயற்பாடுகளை கடந்த 24ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்கள்.
இதன்போது பல ஆசிரியர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் அன்று இடம்பெற்று இருக்கிறது.
ஆசிரியர்களின் ஓய்வு
இன்றைய காலகட்டத்திலே வயது மாற்றத்தின் அடிப்படையில் விரைவாக ஆசிரியர்களுக்கான அல்லது அரச ஊழியர்களுக்கான ஓய்வு அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே பல ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திலே ஓய்வுக்கு சென்றிருந்தார்கள்.
இதனால் பாடசாலைகளில் பல ஆசிரியர்களுடைய குறைபாடுகள் காணப்படுகின்றது. முக்கியமான பல பாடங்களுக்கான ஆசிரியர்களுடைய பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதன்போது அந்த இடங்களுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனத்தினை வழங்குவதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார்கள். இவர்கள் கல்வி அமைச்சினாலே பரீட்சைகளை நடத்தப் போகின்றோம். ஆசிரியர்களை நியமிக்க போகின்றோம் என்று பல வருடங்களாக இன்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த கதையினை கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்வி புலத்தை ஏமாற்றும் செயல்பாடு
இன்று வரைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதற்கான எந்த ஒரு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவுமில்லை, நியமிக்கப்படவும் இல்லை. தொடர்ச்சியாக இவர்கள் கல்வி புலத்தை ஏமாற்றுகின்ற செயல்பாடுகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அது மாத்திரம் இன்றி இன்றைய காலகட்டத்தில் அண்மையில் நடந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை எடுத்துக் கொண்டால் பகுதி ஒன்று பரீட்சை தாளானது மிகவும் அந்த மாணவர்களுடைய வயது எல்லைக்கு அப்பால் சென்று அவர்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தி அந்த பரீட்சைக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலே மிகவும் கடினமான முறையிலே அந்த பரீட்சை வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருந்தது.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை வைத்து பார்க்கும் போது கல்வியினை இவர்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு இட்டு செல்வதற்கான ஒரு சந்தேகத்தினை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.