மலையக பகுதிகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் அசாதாரண சூழ்நிலையில் 2021ம் ஆண்டின் முதல் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கல்வி வலய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புரையின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சமூக இடைவெளி, கை கழுவுதல், உடல் வெப்பநிலை அறிதல், போக்குவரத்து எனச் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு முதல் தவணைக்கான வகுப்புகள் தரம் 02 முதல் தரம் 13வரையிலான இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, ஹட்டன் , வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்தை ஆகிய ஐந்து கல்வி வலயங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாகக் காணப்படுகின்ற காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய கல்வி வலயங்களில் வழமை போன்ற கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் வருகையும் பாதிப்பற்ற வகையில் காணப்படுகின்றது.
கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு ஆரம்ப முதல் இதுவரை நாட்டில் பாடசாலை கல்வி நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களும் கல்வி நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தநிலையில் ஆரம்பக் கல்வி மாணவர்கள் பாதியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் பத்து மாதங்களுக்குப் பின் முறையான கல்வி நடவடிக்கையில் ஆரம்பக் கல்வி மாணவர்கள் முதல் அனைவரும் காலடி எடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








