அறிவூட்டலும் ஆர்வமூட்டலும்! தடுப்பு மருந்தா? பாணியா?
“கொரோனா தொற்றுக்கு வக்சின் தராங்க எல்லாருக்கும் கிடச்சா நல்லாருக்கும். ஏன்னா நோய் குணமாகிருமே?” என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் இர்பான்.
“எல்லாருக்கும் ஊசிய போட்டுட்டா வேல முடிஞ்சுரும். நோய் வராதே” என்கிறார் கொழும்பைச் சேர்ந்த நிர்மலன் சுவாமிநாதன்.
“அதான் ஊசி வந்துட்டே பிறகென்ன எல்லா இடத்துலயும் சுற்றித் திரியலாம். வழமைபோல எங்கட சோலிய பாக்கலாம்” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவசிதம்பரம் கிரி.
கொரோனா தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்தல், முகக்கவசம் என்ற வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த இலங்கை மக்கள் இப்போது தடுப்பூசித் தொடர்பில் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் என ச.பார்தீபன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அவரது கட்டுரையில் மேலும்,
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனினா தடுப்பூசியை இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான அவசரகாலத்திற்கு பயன்படுத்த தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
இந்திய அரசாங்கம் வழங்கிய கொரோனா தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த 28ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார்.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் 60 வய வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் 31 இலட்சத்து 59 ஆயிரத்து 800 பேருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளும் பணியாளர்கள் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 700 பேருக்கும், நோய்களுடன் வாழும் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 32 இலட்சத்து 22 ஆயிரத்து 510 பேருக்கும் 40 முதல் 59 வயதுக்குட்பட்ட எவ்வித நோய் அறிகுறிகளும் அற்ற 31 இலட்சத்து 14 ஆயிரத்து 660 பேருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தடுப்பூசியே தவிர நோய்க்கான மருந்தல்ல எனினும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொது மக்களில் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு மருந்தாக கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பெருந்தொற்று அல்லது ஒரு மிக மோசமான தொற்றுநோய் மனிதர்களைத் தாக்கி, அவர்களுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய உடல்நல பாதிப்புகளை உருவாக்கி, ஏதேனும் ஓர் உறுப்பு சேதம் அல்லது உயிர் பாதிப்போ நிகழ்ந்தால், அந்தக் கிருமியையும் அதன் நோய் தரும் நீட்சியையும் தடுக்கவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. “தடுப்பு மருந்து” என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.” என்பதே விஞ்ஞான ரீதியான விளக்கம்.
பெரியம்மை, போலியோ, கொலரா போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் போன்று கொரோனாவிற்கு வழங்கப்படுவதும் ஒரு தடுப்பூசியேத் தவிர மருந்து அல்ல. உண்மையில் தடுப்பு மருந்து குறித்து இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தெளிவற்ற புரிதல் காணப்படுவதற்கு காரணம் 1980களுக்கு பின்னராக காலப்பகுதியில் உலகையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு ஒரு தொற்று நோய் பரவாத நிலையில், தடுப்பூசி குறித்த புரிதல் இவ்வாறு காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அரசாங்கத்திற்கும், ஊடகங்களுக்கும் பாரிய பொறுப்பிருப்தை மறுப்பதற்கில்லை. எனினும் யதார்த்தம் வேறு கதையாக இருக்கின்றது.
தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கான தெளிவுபடுத்தல்கள் மற்றும் தயார்படுத்தல்களில் அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான சுகாதார நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என்கிறார் அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய.
“தடுப்பூசியை எடுத்த மாத்திரத்தில் வழங்கிவிட முடியாது. அதேவேளை தாமதப்படுத்தவும் முடியாது. சரியான வெப்பநிலையில் அதனை களஞ்சியப்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். அதனைவிட சரியான கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் வழங்கப்பட வேண்டும். இதற்கென தாதியர்கள் மற்றும் வைத்தியர்களைத் தாண்டி வேறு தரப்பிளனரையும் இணைத்துக்கொண்டு எவ்வாறு இதனை வெற்றிகரமான செயற்படுத்த முடியும் என்பது தொடர்பில் திட்டமிடல் அவசியம். அதனைவிட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அனைத்து செயற்பாடுகளையும் சுகாதார அமைச்சு திட்டமிட்டு இணைந்து செயற்படக்கூடிய தரப்பினை இணைத்து செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.” எனினும் அவ்வாறான எந்தவொரு திட்டமிடலையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.
தடுப்பூசித் தொடர்பில் அரசாங்கம் எவ்வித திட்டமில்களையும் மேற்கொள்ளாமல் தவறான தகவல்களை பரப்புவதாக அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்.
“தடுப்பூசித் தொடர்பிலும் பொய்யான தகவல்களையே பரப்புகின்றனர். இன்று இருக்கும் நிலைமையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்க குறைந்தது இரண்டு வருடங்களாகவது செல்லும். ஆளணிப் பற்றாக்குறை, களஞ்சிய வசதி இன்மை போன்ற பல குறைபாடுகளை நாம் எதிர்நோக்க வேண்டியேற்படும். ஆகவே அதற்குள் வேறு ஒரு நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய கொரோனா தடுப்பு செயற்றிட்டத்தில் உள்ளவர்கள் என உயரிய இடத்தில் இருப்பவர்கள் இதுத் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். திட்டமிடல் மிக முக்கியம். அதனைவிட அதனை செயற்படுத்த வேண்டும்.” என்கிறார் அவர்.
இதேவேளை தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் இதுத் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார். தற்போதைய சூழ்நிலையில் இதுத் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை எனவும் தடுப்பூசி இறக்குமதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அறிக்கைகள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்க முடியுமென அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தடுப்பு மருந்து இறக்குமதி செய்யப்பட்டுவிட்டது எனினும் அறிவுறுத்தல்கள் எதனையும் காணமுடியவில்லை.
வெள்ளம் வரும்முன் தடுப்பை அமைக்க வேண்டுமேத் தவிர, வரும்போது பார்த்துக்கொள்வோம் என அலட்சியமாக இருப்பது சரியான தீர்மானமாக அமையாது என்பதே செயற்பாட்டாளர்களின் கருத்து.
28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்பவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வேறெந்த தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளக்கூடாது. முதல் தவணையில் (டோஸ்) வழங்கப்படும் தடுப்பூசி மருந்தே இரண்டாவது தவணையிலும் செலுத்தப்படும். இதனை தடுப்பூசி போட்டு கொள்பவர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது. என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் தடுப்பூசி குறித்த எந்தவொரு தெளிவுபடுத்தல் அறிவித்தலையும் அச்சு ஊடகங்களிலோ இலத்திரனியல் ஊடகங்களிலேயே காணமுடியவில்லை என்கிறார் ஊடகவியலாளர் நிரோஷ் குமார்.
இது புதுவிதமான பிரச்சினை இதனை எதிர்கொள்வது தொடர்பில் சுகாதாரத் தரப்பினருக்கு தெளிவு காணப்படலாம் எனினும் தடுப்பூசி குறித்த தெளிவுபடுத்தல் அவசியம்.” என்கிறார் நிரோஷ்.
“உதாரணமாக கொரோனா தடுப்பூசியைப் ஏற்றுவது, அதனை களஞ்சியப்படுத்துவது, இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் சுகாதாரத் தரப்பினர் அறிந்திருக்கலாம். எனினும் சாதாரண மக்களுக்கு அதுத் தொடர்பிலான தெளிவினைப் பெற்றுகொள்ளவில்லை என்பதே எனது கருத்து. உதாரணமாக எமது நாட்டில் பெரும்பாலான ஆண்கள் மதுப்பழக்கம் உடையவர்கள். ஆகவே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் மதுபாவனையில் ஈடுபடக்கூடாது என்ற விளம்பரத்தை எங்காவது காணமுடிகிறதா? இல்லைதானே? ஆகவே அரசாங்கதம் முதலில் இதுத் தொடர்பிலான தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்க வேண்டும். எனினும் இதுவரை அதற்கான சமிக்ஞையைக் கூட காணமுடியவில்லை.” என்கிறார் நிரோஷ்.
அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஆகியோர் குறிப்பிடுவதுபோல் முன்னேற்பாடுகள் எதனையும் அவதானிக்க முடியவில்லை. ஆனால் உலக நாடுகள் பல்வேறு திட்டமிடல்கள் விசேட செயற்றிட்டங்கள் ஊடாக முன்னோக்கிப் பயணிக்கின்றன.
இலட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் ஆயிரக்கணக்கான முன்னாள் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கு பயிற்சியளித்து தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் அவர்களை இணைத்துக்கொண்டுள்ளதாக பிரித்தானிய தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, கனடா போன்ற அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகள் பலவும், முன்னாள் சுகாதார சேவையாளர்கள், தன்னார்வ தொண்டர்களை இணைத்து பயிற்சியளித்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன என தகவ்லகள் தெரிவிக்கின்றன.
அதனைவிட, உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசி வழங்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆறு படிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. நோய்க்கிருமி மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் முதலில் தெளிவுபடுத்தல்.
2. தேவைகள், பல்வேறு விநியோக சூழல்களுக்கான சேமிப்பு மற்றும் கையாளுதல் கொள்கைகளை விளக்குதல்.
3. கழிவுகளை அகற்றுவதற்கான நடைமுறைகளை விபரித்தல் தடுப்பூசி நிர்வாகத்தின் செயன்முறையை விபரிக்கவும் மற்றும் தடுப்பூசி வழங்களின்போது பயன்படுத்தப்பட வேண்டிய தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்.
4. நோய்த்தடுப்புக்குப் பின்னரான பாதகமான நிகழ்வைக் கண்டறிந்து அதனை அறிக்கையிடுதல்.
5. பதிவு மற்றும் பதிவு படிவங்களை அங்கீகரித்து தவறவிட்டவர்களை (தடுப்பூசியை) கண்காணித்தல்.
6. தடுப்பூசி பற்றிய பயனுள்ள மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை நிரூபித்தல்.
இவ்வாறு உலக நாடுகளின் திட்டமிடல் இருக்கின்றபோது இலங்கையில் பயிற்சித்திட்டம் எதனையும் அரசாங்கம் ஆரம்பித்தமைக்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதோடு இதுத் தொடர்பில் தாதியர்களுக்கேனும் எவ்வித பயிற்சிகளையும் ஆரம்பிக்கவில்லை என்கின்றார் தாதியர் அதிகாரிகள் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய.
பொறுப்பு அதிகாரிகள், சரியான நேரத்தில், சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை இலங்கையில் சரிவர ஆற்றப்படவில்லை. இதற்கு உதாரணமாக அமைந்தது உள்ளநாட்டு 'பாணி வைத்தியம்'. கொரோனாவிற்கு மருந்தாக கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்ற நாட்டு வைத்தியரின் ஒரு வகை பாணியை பருக முடியும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஒருசில வாரங்களின் பின்னர் அதே ஊடகங்கள் பண்டாரவின் பாணியை பருகிய சுகாதார அமைச்சர் பவித்ரரா வன்னியாராச்சிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன. ஊடகங்களுக்கு சுவாரஸ்யமான செய்திகயாவே இவை உள்ளனவே தவிர மக்களுக்கு அறிவூட்டல் விழிப்புணர்வூட்டல் என ஊடகங்கள் செயற்படவில்லை. அதற்கு முறைமைப்படுத்தப்பட்ட தகவல்கள் வழங்கல் இங்கில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்து ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில் சில நாடுகள் தடுப்பூசிய கண்டறிந்து பயன்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதோடு அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன.
இலங்கையை பொறுத்தவரையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திந்தாலும் மறுபுறத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருந்துகள் குறித்த மோகம் அரசாங்கத்தை விட்டுவைப்பதாகயில்லை. இலங்கையின் சுதே மருந்துகள் மற்றும் பாணிகள் ஊடாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென்ற பிரச்சாரத்தை அரசாங்கமே முன்னெடுத்திருந்ததாக அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார். விசேட வைத்திய நிபுணர்கள் கூட இலட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து கொரோனா தொற்று பாணியை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.
ஆகவே இதனை முகாமைப்படுத்த வேண்டியது யாருடைய பெறுப்பு? சுகாதார அமைச்சரும் தான் பாணியை பருகியதால் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்திருக்கக்கூடும். சில அரசியல்வாதிகள் இவற்றை ஊக்குவித்தார்கள், சில ஊடகங்கள் இதனை பிரச்சாரத்தை வழங்கினார்கள் சில வியாபாரிகள் அதனை பயன்படுத்திக்கொண்டார்கள். இதுவே கசக்கும் உண்மை.
“ஊடகங்களும் ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும். தனிநபர்களின் தேவைகளுக்கு அமைய செயற்படக்கூடாது. இதனை அரசாங்கமே ஒழுங்குப்படுத்த வேண்டும். உதாரணமாக ஏதாவது ஒரு ஒளடதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதுத் தொடர்பில் சுகாதாரத் தரப்பின் அறிவுறுத்தல் இன்றி செய்திகளை வெளியிடுவதால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள். ” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.
உண்மையில் அனுமதி வழங்கப்படாத மருந்துகள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறு என்றாலும், அங்கீகரிக்கப்படாத ஒரு ஒளடதத்தை பொதுவெளியில் மக்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கியது யார் என்ற கேள்வி எழுகின்றது? இதனை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்புகள் என்ன செய்திருக்க வேண்டும்?
கெரோனா எனப்படுவது ஒரு வைரஸ் தொற்று இதனை சுதேச வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தடுப்பூசியால் மாத்திரமே இதனை குணப்படுத்த முடியுமென்ற விஞ்ஞான ரீதியான உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய.
“மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தல் அவசியம், கொரோனா தடுப்பூசித் தொடர்பிலும் கொரோனா பாணிகளின் உண்மைத் தன்மைத் தொடர்பிலும் மக்களை தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையென்றாலும் அதனை சரிவர நிறைவேற்றுவதில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைத் தொடர்பில் நாம் ஏஙற்கனவே சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.” என்கிறார் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவிக்கின்றார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுத்திருக்க முடியும். எனினும் சரியான திட்டமிடல்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளாத அரசாங்கம் நாடு முழுவதும் வைரஸ் பரவுவதற்கான சந்தர்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதே சுகாதாரத் தரப்பினர் செயற்பாட்டாளர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
இந்த இடத்தில் மக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம். மக்கள் தம்மைத்தாமே பாதுகாக்க சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடத்தல் முக்கியம். சுகாதாரத்துறையும் மக்களுக்கான அறிவூட்டலை அறிவுறுத்தலை இடைவிடாது செயற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். எனினும் நடந்தது என்ன? பாணிக்கு இலவச பிரச்சாரத்தை வழங்கிய ஊடகங்கள் மக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான நிரூபிக்கப்பட்ட தகவல்களை முழுமையாக வழங்கவில்லை.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும் எனவும், அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்களும் முரண்பாடான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசித் தொடர்பில் நம்பிக்கைக்கொள்ள முடியாது என ஒருசிலர் தெரிவிக்கின்றனர். தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் பட்சத்தில் சிறப்பான விடயமாக அமையுமென ஒரு தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசியை அரசாங்கமே பரிந்துரைக்கின்ற நிலையில் அதனைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என மற்றுமொரு சாரார் தெரிவிக்கின்றனர். கொரோனா பாணியை பருகியதால் தான் சுகமடைய முடியுமென வேறுசில பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், தடுப்பூசி தொடர்பாக நாட்டு மக்களின் அணுகுமுறையை கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இவர்களில் 37 வீதமானோர் கொரோனா தடுப்பூசி பெறுவது நிச்சயமற்றது என தெரிவித்துள்ளனர். 8 வீதமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளப்போவது இல்லையென தெரிவித்துள்ளனர்.
அவ்வாறெனின் ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 45 வீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசித் தொடர்பில் நம்பிக்கையில்லை, அதனைவிட ஒரு சாரார் பாணிகள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கையற்ற மக்களுக்கு தடுப்பு மருந்தை கட்டாயப்படுத்தி வழங்கியும் பிரயோசனமில்லை. காரணம் அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணப்போவது இல்லை. இந்த நிலைமையை சமாளிக்க முதலில் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பபூசிக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உள்ளூர் பாணிகள் குறித்த பொய் பிரச்சாரத்தை நிறுத்தி அதன் உண்மைத் தன்மைத் தொடர்பில் (அந்த பாணி குறித்த உண்மையான விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தை) மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள பொது மக்களும் அரசாங்கமும் தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
