மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வருடத்துக்குள், மின்சாரக் கட்டணத் திருத்தம் இடம்பெற வாய்ப்பில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கான நீடிப்புக்காக இலங்கை மின்சார சபையிடம் இருந்து தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், புதிய பிரேரணையை தயாரிப்பதற்கு இரண்டு வார கால அவகாசத்தை இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கோரியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
கட்டண திருத்தம் சாத்தியமில்லை
முன்னதாக, இந்த புதிய முன்மொழிவு முதலில் நேற்று சமர்ப்பிக்கப்பட இருந்தது. எனினும், ஆரம்ப கட்டணத் திருத்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட குறைப்பு சதவீதங்கள் போதுமானதாக இல்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சாரசபைக்கு அறிவித்திருந்தது.
இதனையடுத்தே, புதிய பிரேரணையை தயாரிப்பதற்கு, நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இரண்டு வார கால அவகாசம் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், புதிய யோசனை தயாரிக்கப்பட்டாலும், அதனை நிறைவேற்ற, மேலதிகமாக இரண்டு வாரங்கள் அவகாசம் தேவை என இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டுக்குள் மின்சாரக் கட்டண திருத்தம் சாத்தியமில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |