சாரதி ஓட்டுனர் உரிமம் பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்
சாரதி ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் அவற்றை அச்சடிக்க முடியாமல் சுமார் பத்து இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் குவிந்து கிடக்கின்றன.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றும் அத்தியாவசிய நபர்களுக்கு மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர்கள், தரகர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 700 முதல் 800 ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட அதிகாரி
அதற்கு ஒருவரிடமிருந்து 5000 ரூபாய்க்கு மேல் பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட மோசடி அதிகாரி வாரத்திற்கு 10 முதல் 20 இலட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பார். அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அதிகாரி ஒருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்துப் பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்ட அதிகாரி ஒருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறித்த அதிகாரி அரச நிர்வாக சேவையை சேர்ந்த உத்தியோகத்தர் எனவும், அவர் அந்த அலுவலகத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட போதிலும், அரசியல் அதிகாரத்தை பெற்று அந்த பதவியில் தொடர்ந்து இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்கவிடம் கேட்ட போது, 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அட்டைகள் இல்லாத காரணத்தினால் அச்சிடப்படாமல் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து ஓட்டுநர் உரிமங்களும் அச்சிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், ஓட்டுனர் உரிமத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |