வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புகள் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Photos)
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் கண்காட்சி
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கைத்தொழில் கண்காட்சி இன்று (01.09.2023) காலை ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட
அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, யாழ்
இந்திய துணைத் தூதுவராலயத்தின் பிரதானி ராகேஸ் நடராஜன் உட்பட பிரமுகர்கள்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று (01.09.2023) காலை 10 மணியளவில் ஆரம்பித்த கண்காட்சி நாளை (02.09.2023) மற்றும் நாளை மறுநாள் (03.09.2023) என மூன்று தினங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் வகையில் இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட காட்சியறைகளில் புத்தாக்கங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்கள் என்பன குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |