AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..
இந்தோனேசியா தனது பதிப்புரிமைச் சட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்யப் புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இந்த சட்டம் நிறைவேறினால், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பதிப்புரிமைச் சட்டத்திற்குள் கொண்டு வந்த முதல் நாடாக இந்தோனேசியா மாறும்.
இந்த புதிய விதிகளின்படி, முற்றிலும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் படைப்புகளுக்குப் பதிப்புரிமைப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது.
மாறாக, ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டு, அதில் மனிதர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கும் படைப்புகளுக்கு மட்டுமே பதிப்புரிமை அங்கீகாரம் கிடைக்கும்.
உரிய இழப்பீட்டுத் தொகை
கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கும், இணைப்பு முன்னோட்டங்களைக் காட்டுவதற்கும், ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை செய்தி வெளியீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த ட்டம் கட்டாயமாக்குகிறது.

இந்த புதிய சட்ட வரைவுக்குக் கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மிகவும் பரந்த அளவில் உள்ளதாகவும், இவை உள்ளூர் படைப்பாளர்களைப் பாதிப்பதோடு நாட்டின் டிஜிட்டல் எதிர்கால முதலீடுகளையும் புதுமைகளையும் முடக்கிவிடும் என்றும் கூகுள் எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கை, உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை முறைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் போலிப் பதிவுகளை (Deepfakes) அடையாளப்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தற்போது இந்தோனேசியாவும் மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் ஏஐ இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த சட்டத்தைக் கொண்டுவருகிறது.