இந்திய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கோரியுள்ளார்.
தனது இறையாண்மையுள்ள ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி, புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய கடற்றொழிலாளர்களையும், நல்லெண்ணத்தின் அடையாளமாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார். ,
மயிலாடுதுறை தொகுதியில் இருந்து, நாடாளுமன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான, ஜனாதிபதியின் உறுதியான நோக்கத்திற்கு இத்தகைய சைகை நிறைய வலு சேர்க்கும் என்று, தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
37 கடற்றொழிலாளர்கள்
மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 கடற்றொழிலாளர்களை விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க முடியும் எனவும், அத்துடன் இலங்கையில் 80 தமிழக கடற்றொழிலாளர்களும் 173 படகுகள் காவலில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் போன்ற போர்க்குணமிக்க அண்டை நாடு உட்பட பல நாடுகளுடன் கடல் எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
ஆனால், அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை, இலங்கையை போன்று எந்த நாடும் கைது செய்வது, அபராதம் விதிப்பது, சேதப்படுத்துவது மற்றும் தாக்குவது இல்லை.
பிராந்தியத்தில் பொறுமை மற்றும் அமைதியை சோதிக்கும் வகையில் இலங்கை தரப்பிலிருந்து அடிக்கடி ஆத்திரமூட்டல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் வங்காள விரிகுடா போன்ற பொதுவான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்த முடியாது என்றும் அவர், குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |