மோடியின் விஜயத்துக்கு பின்னர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்
பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணத்தை முடித்த பிறகு, இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி நிறுத்தப்பட்டிருப்பது பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்தியா மற்றும் இலங்கையின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என இந்திய தரப்பு வலியுறுத்தியுள்ளது.
கடல்சார் உறவு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனை விளக்கும் முகமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சும் விசேட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தப் பணி இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை மற்றும் மஹாசாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) முன்முயற்சியுடன் ஒத்துப்போவதாக இந்தியா கூறியுள்ளது.
பிராந்திய ஸ்திரத்தன்மை
இது பிராந்திய ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கும் இந்தியப் பெருங்கடலில் நட்பு நாடுகளுடன் கடற்படை இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்க்கப்பலின் வருகையின் போது, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் பணியாளர்கள் தொழில்முறை தொடர்புகள், அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சிகள், இரு கடல்சார் படைகளுக்கும் இடையே செயல்பாட்டு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதையும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

