அமெரிக்காவில் மர்ம நபர்களால் இந்தியரொருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!
அமெரிக்கா - ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் படேல் எனும் 45 வயதான நபரே இவ்வாறு நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் காலை வேளையில் வங்கியில் பணத்தை வைப்பிலிடுவதற்காக அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் வங்கிக்குள் நுழைவதற்கு முன்னர் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்தியுள்ளார். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் மர்ம நபர் அமித் குமார் வங்கியில் வைப்பிலிடுவதற்காக கொண்டு சென்ற பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.