இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவின் வரலாற்றில் முதல் பிரதமராகும் இந்தியர்!
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார்.
தாய் நாட்டை ஆட்சி செய்தவர்களின் பிரதமர்
இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக்,ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார்.
ரிஷி சுனாக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு எம்.பி.யாக முதன்முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்வான இவர், 2020 பெப்ரவரியில் அந்த நாட்டின் நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமராக ரிஷி, பிரிட்டனின் பொருளாதாரத்தை நிலை கொண்டுவரத் திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பொருளாதார மேம்பாடு, பண வீழ்ச்சியை சரி செய்தல், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருதல் என்று பல பொறுப்புக்கள் தற்போது ரிஷி வசம் உள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்விற்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும் பதவியேற்பு நாளை நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாக கூறப்பட்டக் கருத்துக்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.
ரிஷி சுனாக்கின் பயணம்
ரிஷி சுனாக் தனது இணையதளத்தில்,"நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சுனாக் சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், "வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன். அது பலன் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் பிரதமர் பதவியின் கடந்தகால நிலைப்பாடு
பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும் என்ற ஒரு நிலைப்பாடு அங்கு காணப்பட்டது.
இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.
இதனால் 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அடுத்த பிரதமர் பதவிக்கான தேர்தல் ஆரம்பமானது.
இந்த தேர்தலில் பெண் எம்.பி.யான பென்னி மோர்டார்ட், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ரிஷி சுனாக்கும் தேர்தலில் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அவருக்கு, கட்சியின், 128 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையடுத்து ரிஷி சுனாக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் .இதன் மூலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டனின் முதல் ஹிந்து பிரதமராகிறார் ரிஷி சுனாக்.