ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த இந்தியக் கொடி ஏந்திய கிரீன் ஆஷா மற்றும் கிரீன் சான்வி ஆகிய இரண்டு எல்பிஜி சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன.
எல்.எஸ்.இ.ஜி மற்றும் கெப்லர் தரவுகளின்படி, இந்தக் கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குக் பகுதியை அடைந்துள்ளன.
அதேசமயம், ஜக் விக்ரம் என்ற மற்றொரு கப்பல் இன்னும் நீரிணையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், "பகைமை இல்லாத நாடுகள்" தங்கள் கப்பல்களை இயக்கலாம் என்ற ஈரானின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா தனது சிக்கித் தவிக்கும் எரிவாயு சரக்குகளை படிப்படியாக மீட்டு வருகிறது.
எரிவாயு நெருக்கடி
இதுவரை ஷிவாலிக், நந்தா தேவி உள்ளிட்ட எட்டு இந்தியக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து தாயகம் திரும்பியுள்ளன. இந்தியா தற்போது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான எரிவாயு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா 33.15 மில்லியன் மெட்ரிக் தொன் எல்பிஜியைப் பயன்படுத்தியுள்ளது, இதில் சுமார் 60% தேவையை இறக்குமதியே பூர்த்தி செய்கிறது.
குறிப்பாக, இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் 90% மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறப்படுவதால், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு தடையுமே இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கிறது.
தீவிர நடவடிக்கை
தற்போது நிலவும் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாக்க, தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை அரசு குறைத்துள்ளது.

அதே நேரத்தில், வளைகுடா பகுதியில் காத்திருக்கும் இந்தியக் கப்பல்களில் எல்பிஜியை ஏற்றி விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.