எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு: ஓபெக் நாடுகளின் முக்கிய முடிவு
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரினால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஓபெக் பிளஸ் நாடுகள் மே மாதத்திற்கான எண்ணெய் உற்பத்தி அளவை நாளொன்றுக்கு 2,06,000 பீப்பாய்களாக உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த உற்பத்தி உயர்வு தற்போதைக்கு ஒரு அடையாளப்பூர்வ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பெரல் 120 டொலர் என்ற நான்கு ஆண்டு கால உச்சத்தைத் தொட்டுள்ளது.
மே மாத நடுப்பகுதி வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தால், விலை 150 டொலரைத் தாண்டும் என ஜே.பி. மோர்கன் (JPMorgan) எச்சரித்துள்ளது.

இந்தப் போரினால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 15 சதவீதம் (12 முதல் 15 மில்லியன் bpd) தடைபட்டுள்ளது. உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பிப்ரவரி மாத இறுதியில் இருந்து முடக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள்
ஈரான் தனது கடல் எல்லையில் சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. ஈராக் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் போக்குவரத்தை சீரமைக்க ஓமான் மற்றும் ஈரான் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை திங்கட்கிழமைக்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட எட்டு ஓபெக் பிளஸ் நாடுகள் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நீரிணை மீண்டும் திறக்கப்பட்டவுடன் விநியோகத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் விநியோகச் சங்கிலியை நீண்ட காலத்திற்குப் பாதிக்கும் என அவை கவலை தெரிவித்துள்ளன.