கச்சத்தீவிற்கு உயிர் தப்பி வந்தடைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக கச்சத்தீவிற்கு வந்தடைந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால் அவர்கள் இன்று (29.08.2024) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
நான்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய விசைப்படகு ஒன்று நேற்று முன்தினம் கடுமையாக காற்று வீசியதால் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
படகு விபத்து
இதன்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கச்சத்தீவில் வைத்து இரண்டு கடற்றொழிலாளர்களை மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல் போயிருந்தமையும் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில், காணாமல் போன இருவரில் ஒருவா் நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கச்சத்தீவுக்கு நீந்திச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |