திடீரென அதிகரிக்கும் பேருந்து கட்டணங்கள்.. வெளியான எச்சரிக்கை
எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், இந்நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, பேருந்துகளை இயக்குவதில் பாரிய நஷ்டம் ஏற்படுவதாக கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி, கொழும்பு பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலுக்கு 2.5 முதல் 3Km வரை பேருந்துகள் பயணிக்க வேண்டும். ஆனால், தற்போது நிலவும் கடும் வாகன நெரிசலால், ஒரு லீற்றருக்கு 2 kmக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்டணத் திருத்தம்
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமானால், எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக கட்டணத் திருத்தம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை சுமார் 5 முதல் 6 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் ஆகியும் பொதுப் போக்குவரத்து துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சாடியுள்ளார்.
அத்துடன், போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடையே ஊழல் நிலவுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
நாடெங்கிலும் சுமார் 13,000 முதல் 14,000 வரையான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சேவையைத் தொடர்வது தற்போது சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.