302 இல் இருந்து 332ஆக வீழ்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி! வருடத்தை மறந்து பேசிக்கொண்டிருக்கும் அநுர
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்றார் என்பதை மறந்துவிட்டார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ரூபாவின் பெறுமதி 302இல் இருந்து 332 ரூபா வரை அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய(19.11.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அரசியல் உரைகளில் பெரும்பாலும், 2022ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம்
2022ஆம் ஆண்டில் இருந்து நேரடியாக 2025ஆம் ஆண்டுக்குச் சென்று தரவுகளை ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஆனால், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளைப் பெரும்பாலும் அவர் தவிர்த்து வருகின்றார்.
அநுர குமார 20224, செப்டெம்பரில் இந்த நாட்டைப் பொறுப்பேற்றார் என்பதை மறந்துவிட்டது போல தெரிகின்றது. அவர் நாட்டைப் பொறுப்பேற்ற போது, 2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.3 சதவீதமாக இருந்தது.
அப்போது பணவீக்கம் காணப்படவில்லை. மாறாக, பணவாட்ட நிலை காணப்பட்டது. பணவீக்கம் எதிர்மறைப் பெறுமதியில் இருந்தது. அதேவேளை, ஒரு அமெரிக்க டொலருக்குச் செலுத்த வேண்டிய இலங்கை ரூபாவின் பெறுமதி 302 ரூபாவாக இருந்தது.

இவ்வாறானதொரு சூழலில்தான் அநுர குமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்றார். நாட்டில், இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருந்தது. எரிபொருள் கொள்வனவுக்கான ஒப்பந்தங்களும் கோரப்பட்டிருந்தன. நிலக்கரியும் இருந்தது. மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளும் அப்போது காணப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி எப்போதும் 2022ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்குகளை முன்வைக்கின்றார். 5.3 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த வளர்ச்சி மேலும் குறைவடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் எதிர்வுகூறுகின்றன.
ஆனால், ஜனாதிபதி 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையில், 2027ஆம் ஆண்டாகும் போது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 7 சதவீதமாக உயர்த்துவதாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்ட ஆவணத்தில் அந்த இலக்குகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எதிர்வரும் ஆண்டுகளுக்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பான திட்டங்களும் முன்பிருந்தததைப் போன்று தெளிவாக முன்வைக்கப்படவில்லை.
5.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 302 ரூபாவில் இருந்து 332 ரூபா வரை அதிகரித்துள்ளது.
மறுபுறம், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. எரிபொருள் விலை, எரிவாயு விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் என அனைத்தும் உயர்ந்து வருகின்றன.
ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கத்திடம் காண முடியவில்லை. அதற்குப் பதிலாக அடக்குமுறைகளிலும் கைது நடவடிக்கைகளிலும் மட்டுமே அரசாங்கம் ஈடுபடுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! சிறைச்சாலை முன் திரண்ட உறவினர்களால் பதற்றம்