ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலியான சோகம்! வெளியான காரணம்
கொழும்பு - கடுவலை நகரில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை (19) 6.20 மணியளவில் இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் தந்தை உட்பட இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம்
இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக அமையக்கூடிய ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
மாலபே - தலஹேன பகுதியில் வசித்த தம்பதியினர், குறித்த இரண்டு மாடி கட்டடத்தை குத்தகைக்கு எடுத்து மின்சாதன கடையை நடத்தி வந்துள்ளனர்.
இருப்பினும், அவர்கள் வழக்கமாக இரவில் தலஹேனவில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்வதாகவும், சில நாட்களில் அங்கேயே தங்குவதாகவும், அன்று இரவு அந்தக் கடையிலேயே தங்கியிருந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.
இந்த தம்பதியினர் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் கடையின் மேல்மாடியில் தங்கியிருந்த நிலையில், நேற்று தங்களது அன்றாட பணிகளை முடித்துவிட்டு குழந்தைகளுடன் மேல்மாடிக்கு சென்று உறங்கிக்கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நால்வரின் உடல்களும் மேல் தளத்தில் உள்ள படுக்கைகளில் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வெளியான காரணம்
இருப்பினும், ஏற்கனவே பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர்கள் நால்வரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய தம்பதியினரும், அவர்களது 2 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களும் ஆவர்.
தீயை அணைப்பதற்காக கோட்டை தீயணைப்புத் துறையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்ட நிலையில், பல மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புகை மூட்டத்தினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த விற்பனை நிலையத்தின் தரம் குறைந்த கட்டுமானம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார்.
இருப்பினும், விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் உரிமையாளர், கட்டடத்தின் பின்புறத்தில் 50 அடி நீளமுள்ள ரோலர் கதவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


